தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு - ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க ஐகோர்ட்டு அனுமதி

நிபந்தனைகளை அமல்படுத்தாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க அனுமதி வழங்கி இருக்கிறது.

Update: 2020-05-09 00:15 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழு வதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அதிகார வரம்புக்குள் உள்ள பகுதியை தவிர, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கை கடந்த 6-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு பதில், ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினர். ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கலாம் என்றும் யோசனை தெரிவித்தனர்.

நிபந்தனைகள்

ஆனால், ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய இயலாது என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பதில் அளித்தார்.

இதையடுத்து டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தடை இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், அரசு விதித்த நிபந்தனைகளுடன், கூடுதல் நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர்.

சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் செல்லவேண்டும் என்ற அரசு விதித்த நிபந்தனைகளை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஒரே நபருக்கு அதிக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மது வாங்குவோரின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு ரசீது வழங்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுக்கடைகள் திறப்பு

இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால், மதுக்கடைகளின் முன்பு கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சில ஊர்களில் கடைகளின் முன்பு மது பிரியர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீதிபதிகள் விசாரணை

இந்தநிலையில், நிபந்தனைகள் எதையும் பின்பற்றவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அக்கட்சியின் (வடக்கு, கிழக்கு மண்டல) அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா, வக்கீல் ராஜேஷ் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை அவசர வழக்காக நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் மவுரியா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடுகையில் கூறியதாவது:-

அமல்படுத்தவில்லை

மது விற்பனை எப்படி செய்ய வேண்டும்? என்ற நிபந்தனையை அரசு வகுத்தது. இந்த ஐகோர்ட்டும் கூடுதல் நிபந்தனைகளை உருவாக்கியது. ஆனால், அத்தனை நிபந்தனைகளையும் அரசு அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை. சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை.

ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டும், போட்டி போட்டுக்கொண்டும், ஒருவர் தோள் மீது ஒருவர் ஏறியும், மதுபாட்டில்களை வாங்கிச் சென்று உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று, சமூக பரவலாக தமிழகத்தில் மாறும் இடமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் திகழ்கிறது. எனவே, டாஸ்மாக் மதுபான கடைகளை எல்லாம் உடனே மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் முண்டியடிப்பு?

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் வாதாடுகையில், “சுமார் 40 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதால் மதுபாட்டில்களை வாங்க மது பிரியர்கள் முண்டியடித்து உள்ளனர். இந்த நிலை எதிர்காலத்தில் தொடராது. நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்றி, தமிழகத்தில் மது விற்பனை நடைபெறும். எனவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கூடாது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், மதுபாட்டில்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யும் (டோர் டெலிவரி) முறையை தமிழக அரசு ஏன் பின்பற்றக்கூடாது? என்று நாங்கள் கடந்த முறை விசாரணையின்போது கேள்வி எழுப்பினோம். ஆனால், ஆன்லைன் விற்பனை செய்ய எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. அரை நாளில் ஒரு இணையதளத்தை உருவாக்கி விற்பனை செய்ய முடியும்” என்று கருத்து தெரிவித்தனர்.

மூட உத்தரவு

அதற்கு அட்வகேட் ஜெனரல், “ஒருவேளை ஆன்-லைன் விற்பனையை தொடங்கினாலும், அதற்கு குறைந்தது 10 நாட்களாவது கால அவகாசம் தேவைப்படும்” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு நேற்று மாலை தங்கள் இடைக்கால தீர்ப்பை வழங்கினர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் மதுபான விற்பனைக்காக அரசு விதித்த நிபந்தனைகளும், இந்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளும் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டு உள்ளன. நிபந்தனைகளை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. மதுபாட்டில்களை வாங்க மதுபிரியர்கள் முண்டியடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

எனவே, அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் உடனடியாக இழுத்து மூடவேண்டும். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது.

ஆன்லைன் மூலம் விற்பனை

ஒருவேளை ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்