‘அக்னி நட்சத்திரம்’ இன்று தொடங்குகிறது - 28-ந்தேதி வரை வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்

‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 24 நாட்கள் இருக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

Update: 2020-05-03 19:45 GMT
சென்னை,

இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) காலை 8.57 மணிக்கு அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28-ந்தேதி பகல் 1.51 மணியோடு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு இம்மாத இறுதியில் இருந்தே அதிகபட்சமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால் வீடுகளில் முடங்கி கிடப்பதால் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு இருப்பதால், மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது.

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 24 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்று குறைந்து காணப்படுகிறது.

மேலும் செய்திகள்