பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏன் செயல்படுகின்றன? - ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஏன் செயல்படுகின்றன என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க அனுமதியளித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் வேல்முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், பத்திரப்பதிவு அத்தியாவசிய பணி இல்லை. பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘தற்போதுள்ள இக்கட்டான சூழலில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதிநெருக்கடியை சமாளிக்க பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு மிகவும் அவசியமானது.
மேலும் இந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் நோய் தொற்று பரவாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி தேவைக்கும், கடனுதவி பெறவும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், “பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கினாலும் நோய் தொற்று பரவாத வண்ணம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
பத்திரப்பதிவு செயல்படுவது தொடர்பாக பத்திர எழுத்தாளர்கள் சார்பில் புகார்கள் வந்தால், அதை அதிகாரிகள் விரைவாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.