கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை- தமிழக அரசு விளக்கம்
கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் மத்திய அரசு, கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் சில தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் உண்டு என்பது பற்றியும் முதல்வர் பழனிசாமி தரப்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வுகளும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ நோய் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல தளர்வுகளை அனுமதித்துள்ளது. இதன்படி, சிகப்பு மாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, நோய் தடுப்பு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிகப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின் படி ஏற்கனவே முதல் அமைச்சர் வெளியிட்டீல் தெரிவித்த படி அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை.
எனவே, இந்த தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நோய் கட்டுபாடு பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.