ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் மருந்து தட்டுப்பாடு இருக்காது - ‘தேவையான இருப்பு உள்ளது’ என மருந்து வணிகர்கள் தகவல்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் மருந்துக் கடைகளில் வருகிற 30-ந்தேதி வரை மருந்து தட்டுப்பாடு இருக்காது என்றும், தேவையான அளவில் இருப்பு உள்ளது என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காலம் அமலில் இருந்தாலும், மருந்து கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து, அது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.
தற்போது சில மருந்து கடைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து மருந்து வணிகர்களிடம் கேட்டபோது, ‘சில சிறிய கடைகளில்தான் அதுபோன்ற பிரச்சினை இருக்கும் என்றும், தமிழக மருந்து கடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு இருக்கிறது’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வன் கூறியதாவது:-
மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பெரிய குடோன்கள் வைத்து இருக்கின்றன. அந்த குடோன்களில் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் மருந்து கடைகளுக்கு தேவையான மருந்துகளின் இருப்பு இருக்கிறது. ஒரு சில கடைகள் மருந்துகளை எடுத்துவந்து விற்பனை செய்ய முடியாததால், தட்டுப்பாடு என்ற தோற்றம் உருவாகிறது.
தேவையான அளவுக்கு மருந்துகளின் இருப்பு இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் வருகிற 30-ந்தேதி வரை மருந்து தட்டுப்பாடு இருக்காது. அதற்குள் மத்திய-மாநில அரசுகள் இமாசல பிரதேசம், அசாம், கோவா, மராட்டியம், தெலுங்கான ஆகிய மாநிலங்களில் இருக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் துறைசார்ந்த அதிகாரிகள், மருந்துகள் இருப்பு நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டு எங்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். தற்போது ஆன்-லைன் மருந்து வணிகம் முற்றிலும் முடங்கிவிட்டது.
‘டெட்டால்’ பாட்டில் தமிழகத்தில் எங்கும் இருப்பு இல்லை. உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வந்தால்தான் மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.