கொரோனா பாதிப்பு குறித்து நாளை முதல் தினந்தோறும் சென்னை மாநகராட்சி வீடு வீடாக ஆய்வு
கொரோனா பாதிப்பு குறித்து நாளை முதல் தினந்தோறும் தொடர்ந்து 75-100 வீடுகளை 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளைச் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
மாநகரம் முழுமையிலும், அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை சென்னை மாநகராட்சி பெருமக்கள் ஆய்வு செய்யும். அது சாதாரண சளி மற்றும் காய்ச்சலாக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சியின் மூலம் அளிக்கப்படும்.
மேல் சிகிச்சை தேவைப்படின், பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சியால் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இப்பணிக்கு சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் உள்ள சுமார் 10 லட்சம் கட்டிடங்களில், 75-100 கட்டிடங்கள் என்ற வகையில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 13,100 கூறுகள் உருவாக்கப்படும்.
அனைத்துப் பணிகளையும் நேரடியாகக் கண்காணிப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் 16,000 ஊழியர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த ஊழியர்கள், 75-100 வீடுகளை நாளை முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள்.