தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 738 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-04-08 23:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 48 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 60 ஆயிரத்து 739 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 230 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

8-ந்தேதி (நேற்று) ஒரே நாளில் 48 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 738 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பாதிக்கப்பட்ட 48 பேரில், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 8 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 33 பேர் ஆகும். மேலும் இவர்களுடன் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் ஆவார். மேலும் 2 பேர் தமிழக அரசின் கண்காணிப்பில் இருந்தவர்கள். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மற்ற 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த 34 மாவட்டங்களில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 448 வீடுகளில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் 53 லட்சத்து 67 ஆயிரத்து 238 பேரிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக கவசங்கள் உள்ளிட்டவை போதுமான அளவு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-வது கட்டத்தில் இருந்து 3-வது கட்டத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காக தான் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 3 டாக்டர்கள் பாதித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு டாக்டர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்த பெண்ணுடன் ரெயிலில் பயணித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கண்காணிப்பில் தான் வைத்துள்ளோம். அவர்கள் யாருக்கும் இதுவரை அறிகுறி வரவில்லை.

தமிழக மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்