கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசு கேட்ட ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடியிடம் தி.மு.க. வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கேட்ட ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

Update: 2020-04-08 20:44 GMT
சென்னை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்றார். அவர் சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமரிடம் உரையாற்றினார். அப்போது டி.ஆர்.பாலு பேசியதாவது:-

நாட்டின் நலம், மக்களின் நல்வாழ்வு, நாட்டின் பொருளாதாரம் அனைத்தையும் காத்திட உறுதிபூண்டு கண நேரமும் வீணாக்காமல் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வரும் பிரதமருக்கும், உள்துறை மந்திரிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கட்சியும் உறுதியாக துணை நிற்கும். மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஊக்கமுடன் தேவையான ஒத்துழைப்புகளை நல்கும் என்பதை மு.க.ஸ்டாலின் சார்பிலும், தி.மு.க.வின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரை போன்று தமிழக முதல்-அமைச்சரும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் கேட்டுப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

கொரோனா ஒழிப்பு பணிகளில் தி.மு.க.வை முழுமையாக ஈடுபடுத்தி வரும் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு சில வேண்டு கோளை முன் வைக்கிறேன்.

* நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளையும் பணிகளையும் முடக்குவது போலிருக்கிறது.

* தமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை கொரோனோ நோய்த் தடுப்புப் பணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கொரோனோ சோதனை செய்யப்படுவதற்கான ஐ.சி.எம்.ஆர். சோதனைக் கருவிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், இந்த கருவிகள் அதிகம் கிடைக்க ஆவன செய்து மத்திய அரசு உதவிட வேண்டும்.

* தமிழக டாக்டர்களிடம் தனிநபர் பாதுகாப்பு சாதனம் இல்லாததால், அவர்கள் எச்.ஐ.வி. நோய்க்கான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். எனவே தனிநபர் பாதுகாப்பு சாதனம், வெண்டிலேட்டர்கள், மாஸ்க் கருவிகளை தமிழகத்திற்கு போதிய அளவில் உடனடியாக வழங்க வேண்டும்.

ரூ.9 ஆயிரம் கோடி

* கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றுவதற்காகத் தமிழக அரசு கோரியுள்ள ரூ.9 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு, தமிழகத்திற்கு வெறும் ரூ.510 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது மிக மிகக் குறைவாகும். மாநில அரசு கேட்ட தொகையை முழுமையாக வழங்கிட மத்திய அரசை தி.மு.க. சார்பில் வேண்டுகிறேன்.

* புதுச்சேரி அரசுக்குக் கொரோனோ ஒழிப்புப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு நிதியும் மத்திய அரசினால் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு பாரபட்சமின்றி புதுச்சேரி அரசுக்கும் உடனடியாக நிதி வழங்கிட வேண்டும்.

* ஈரானில் சிக்கித் தவிக்கும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாகத் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ரூ.10 ஆயிரம் நிவாரணம்

* ஊரடங்கு நடவடிக்கைகளை நீட்டிக்க விரும்பினால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 2 தவணைகளில் மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

* கொரோனோ ஒழிப்பில் அயராது போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் என அனைவருக்கும் 3 ஊக்க ஊதிய உயர்வுகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

* நிதி நெருக்கடிகளைச் சமாளித்திட ரூ.20 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடம் போன்ற பெரிய திட்டங்களை தற்போது தவிர்க்கலாம்.

* கொரோனோ ஒழிப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, மத வேறுபாடுகளை புகுத்தும் வகையில் பேச முற்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்