கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தி.மு.க. எம்.எல்.ஏ. ஒதுக்கிய நிதியை வாங்க மறுப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தி.மு.க. எம்.எல்.ஏ. ஒதுக்கிய நிதியை வாங்க மறுப்பதா என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவரது தொகுதி மக்கள், அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிதி ஒதுக்கீட்டை முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அ.தி.மு.க. அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்-அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.