கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ ரீதியாக தயார்நிலை: எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த உத்தரவு

கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ ரீதியாக தயார்படுத்தும் வகையில் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இன்று முதல் பாட வகுப்புகளை நடத்தவேண்டும் என்று அரசு, தனியார் கல்லூரிகளுக்கு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-02 21:00 GMT
சென்னை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி அடுத்த கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்குமா? என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மருத்துவ ரீதியாக அதனை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக பயிற்சி டாக்டர்களையும் கொரோனா சிகிச்சைக்கான களத்தில் முழுவீச்சில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் பொதுச்செயலாளர் டாக்டர் ஆர்.கே.வேட்ஸ், அனைத்து அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாடு முழுவதும் தொற்றுநோய் பரவும் வேகத்துக்கு ஏற்ப, நாம் சுகாதாரத்துறைக்கு உதவியாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் எம்.பி.பி.எஸ். இளநிலை பயிற்சி டாக்டர்கள் மற்றும் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான வகுப்புகளை 3-ந்தேதி (இன்று) முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிற இளநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாணவர்களின் பயிற்சி, தடுப்பு மற்றும் போக்குவரத்துக்கான முழு பொறுப்புகளையும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்