கொரோனா பீதி உச்சம்: கோழி விலை தொடர் வீழ்ச்சி - கிலோ ரூ.38-க்கு விற்பனை
கொரோனா பீதி உச்சம் காரணமாக கோழி விலை தொடர் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னை,
உலக நாடுகளை இன்றைக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கோழி இறைச்சியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது.
அது தவறான தகவல், வதந்தி என்று விழிப்புணர்வு வீடியோக்கள் வெளிவருகின்றன. எனினும் கோழி இறைச்சியை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக கோழி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பீதி உச்சம் அடைந்துள்ளது.
இந்தநிலையில் கோழி உற்பத்தி பண்ணைகளில் கோழி விற்பனை ஆகாமல் பெருமளவில் தேக்கம் அடைந்து இருக்கிறது. விற்பனையாளர்களும் கோழியை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால் அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதன்படி சென்னையில் நேற்று உயிருடன் கூடிய கோழி விலை கிலோவுக்கு ரூ.38-க்கு விற்பனையானது. கோழி விலை வீழ்ச்சியை சந்தித்தாலும் ஓட்டல்களில் கோழி மூலம் தயார் செய்யப்படும் உணவு வகைகள் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.