கொரோனா வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!
கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் உள்ள அவரது உறவினர்கள் 6 பேருக்கும், சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 பேருக்கும், அவர்களின் இந்திய டிரைவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கேரளாவில் பாதிக்கபட்ட 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் குர்கானை சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எனண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து, கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு உரிய மருத்துவ அறிவுரைகள், பரிசோதனைக் கூட வசதிகள் போன்றவை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் தீவிரம், அதைத் தடுக்கும் வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு என்று தனியாக வார்டு ஏற்படுத்த வேண்டும்.
வைரஸ் பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுப்பதற்கு, நோயாளிகள் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவவேண்டும்.
மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி அந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகள்,பள்ளி மற்றும் உயர் கல்வி அதிகாரிகள், காவல்துறை, வருவாய் மற்றும் விமானநிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளை இடம்டபெறச் செய்து கொரோனா குறித்து விழிப்புணர்வுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறச் சூழலை துாய்மையாக வைத்துக்கொள்வதை இந்த குழுவின் மூலம் உறுதிபடுத்த வேண்டும்.
மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கவேண்டும். அதேபோல மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கைகளை நன்றாக கழுவுவதற்குத் தேவையான கிருமி நாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும்.
கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.