11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ரூ.565 கோடி மதிப்பிலான, மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றிற்கு மேட்டூர் அணை உபரிநீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். இதனால் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்நிலையில் மேட்டூர் அணையின் உபரி நீரை, மின் மோட்டார் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களுக்கு நீரேற்றம் செய்யும் திட்டமான மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி இன்னும் 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பப்படும் என்று கூறினார்.
குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார், குடிமராமத்து திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டது. திட்டங்களை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு இது அல்ல, எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள் ஆனால் நாங்கள் செயல் வீரர்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
இந்தத்திட்டத்தினால் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, இப்பகுதிமக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.