வங்கியில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - “சாவில் மர்மம் உள்ளது” என்று சகோதரர் பரபரப்பு பேட்டி
திருப்பத்தூர் வங்கியில் பணம் பாதுகாப்பு அறைக்கு காவல் பணிக்கு சென்றிருந்த மதுரை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று சகோதரர் கூறினார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி வங்கிக்கான பணம் பாதுகாப்பு அறை உள்ளது. இந்த வங்கியில் இருந்துதான் அப்பகுதியை சுற்றியுள்ள அந்த வங்கியின் மற்ற சில கிளைகளுக்கு பணம் எடுத்துச்செல்வது வழக்கம்.
எனவே பணம் வைத்துள்ள அறையை பாதுகாக்க ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அதாவது மூன்று மணி நேரத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் நான்கு பேர் மாறி, மாறி பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பணியை முடித்தவர்கள் ஓய்வு எடுக்க அதையொட்டி ஓய்வறையும் உள்ளது. நேற்று காலையில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் யோகேசுவரன் (வயது 29) அந்த வங்கியில் பணம் பாதுகாப்பறை காவல் பணியில் இருந்துள்ளார்.
அவர் சீருடை அணியாமல் லுங்கி கட்டிக்கொண்டு இருந்துள்ளார். காலை 6.05 மணிக்கு அவர் தனது ஓய்வறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டதாக தெரியவருகிறது. அவ்வாறு அவர் பூட்டிய காட்சியானது வங்கியின் கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை 9.45 மணி அளவில் அந்த வங்கியின் மற்ற கிளைகளுக்கு பணம் எடுத்துச்செல்வதற்கான காவல் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்த பெண் போலீசார் இருவர் வந்துள்ளனர். அப்போது வெளியில் உள்ள கிரில் கேட்டானது உள் பக்கமாக பூட்டி இருந்ததால், அவர்கள் வெளியில் இருந்து சத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் போலீஸ்காரர் யோகேசுவரன் பதில் அளிக்காததால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே வங்கி மேலாளருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வங்கி மேலாளர் அங்கு விரைந்து வந்தார். அவர் தன்னிடம் இருந்த இன்னொரு சாவி மூலம் கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பணம் பாதுகாப்பறை காவல் பணியில் இருக்கும் போலீஸ்காரர்கள் தங்குவதற்கான ஓய்வு அறையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர் யோகேசுவரன் குப்புற பிணமாக கிடந்தார். அவரது உடலின் அருகே எஸ்.எல்.ஆர். துப்பாக்கியும் கிடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகவல் பரவியதும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், வங்கி உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ்காரர் யோகேசுவரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு யோகேசுவரன் சாவு குறித்து விசாரணை செய்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் யோகேசுவரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது. அதே நேரத்தில் அவர் பணியில் இருந்த போது, ஓய்வறையில் இருக்க வேண்டிய மற்ற போலீசார் எங்கே சென்றனர்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் போலீஸ்காரர் யோகேசுவரன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் இந்த வங்கிக்கு காவல் பணிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது.
எனவே அவர் பணிச்சுமை காரணமாக இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பின்புலம் உள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ்காரர் யோகேசுவரனின் சகோதரர் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது சகோதரர் யோகேசுவரன் வழக்கம்போல் வீட்டில் இருந்து மகிழ்ச்சியாகத்தான் பணிக்கு சென்றார். இந்த நிலையில் அவரை போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இந்தநிலையில் எங்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சிவகங்கை மருத்துவமனைக்கு சென்று பகல் 11 மணியில் இருந்து காத்திருக்கிறோம். ஆனால் மதியம் 2 மணி ஆகியும் இதுவரை உடல் கொண்டு வரப்படவில்லை. வரும் வழியில் வாகனத்தை நிறுத்தி போலீஸ் சூப்பிரண்டு, யோகேசுவரன் உடலை பார்வையிட்டதாக தெரிவித்தனர். வீட்டில் யோகேசுவரனுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் கூறிவிடுவார். அவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.