டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக பரபரப்பு தகவல்கள்
டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,
சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையதுஅலி நவாஸ், அப்துல்சமீம், கடலூரைச் சேர்ந்த காஜாமொய்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர்கள், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.
இவர்கள் நாசவேலையில் ஈடுபடலாம் என்று தமிழக கியூபிரிவு போலீசார் சந்தேகப்பட்டனர். அதனால் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். அவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் 3 பயங்கரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களது பெயர் காஜாமொய்தீன் (வயது 52), சையதுஅலி நவாஸ் (32), அப்துல்சமத் (28) என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் காஜாமொய்தீனும், சையது அலிநவாசும் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள இன்னொரு குற்றவாளி அப்துல்சமீம், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் காஜாமொய்தீன், சையது அலிநவாஸ் ஆகிய இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை இந்தியாவில் வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டுள்ளனர். மேலும் ஹல்ஹந்த் என்ற அமைப்பை புதிதாக தொடங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் வங்காளதேசத்துக்கு தப்பிச்சென்று விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இவர்கள் ஆந்திராவில் சித்தூர், கர்நாடகாவில் பெங்களூரு ஆகிய நகரங்களில் பதுங்கி இருந்துள்ளனர். பின்னர் ஒடிசா சென்று அங்கிருந்து கொல்கத்தா வழியாக நேபாள நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். நேபாளத்தில் காட்மாண்டு நகரில் பதுங்கி இருந்துள்ளனர். இவர்கள் கார் மற்றும் பஸ்களில் பயணம் செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இதுபோல் பயணித்துள்ளனர்.
டெல்லியில் குடியரசு தினத்தன்று நாசவேலையில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் நேபாளத்தில் இருந்து டெல்லி வந்து தங்கியுள்ளனர். அப்போது போலீஸ் வலையில் சிக்கி விட்டனர். இவர்களை சென்னைக்கு அழைத்துவர தமிழக சிறப்பு பிரிவு டி.ஐ.ஜி. கண்ணன் டெல்லி சென்றுள்ளார்.
இவர்கள் புதிதாக தொடங்கியுள்ள ஹல்ஹந்த் அமைப்பில் மேலும் சிலர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில்தான் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த 7-ந்தேதி அன்று பெங்களூருவில் தமிழக கியூபிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் ஹல்ஹந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 3 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
அவர்களிடம் கியூபிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.