தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ரத்துக்கு இடைக்காலத் தடை -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் விதிமீறல்கள் உள்ளதாகவும், உரிய கல்வித் தகுதி இன்றி பாலசுப்பிரமணியம் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதாகவும் பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் முடிவில் பாலசுப்பிரமணியத்தின் நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியில் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.