மரம் வளர்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்; ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு

மரம் வளர்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் என்று சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி கூறினார்.

Update: 2019-11-04 23:34 GMT
சென்னை,

தமிழக பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு ‘ஒரு நேரத்தில் ஒரு மரம்’என்ற பெயரில் மரம் வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டு எதிரில் என்.எஸ்.சி.போஸ் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பவானி சுப்பராயன், எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, அப்துல்குத்தூஸ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் பேசிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, “ராஜஸ்தானில் நான் சுமார் 45 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தேன். மரக்கன்று வளர்ப்பது என்பது மகன், மகளை வளர்ப்பது போன்றது. மரம் வளர்த்தால் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும்’ என்றார்.

நீதிபதி ஆர்.மகாதேவன், “2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மரம் வளர்ப்பதன் அவசியத்தை நம் முன்னோர் கூறியுள்ளனர்” என்றார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “இதுபோன்ற நிகழ்ச்சிகள் விளம்பரத்துக்காக நடத்தக்கூடாது. மரக்கன்றுகளை நடுவதுடன், அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்” என்றார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா பேசும்போது, “இங்கு நடப்படும் மரக்கன்றுகளை மரத்துக்கு ஒருவர் என பொறுப்பேற்று வளர்க்க வேண்டும். மரக்கன்றை நன்றாக வளர்ப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு இதேநாளில் பரிசு வழங்குவேன்” என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்