நாட்டிலேயே முதல் முறையாக கிண்டி சிறுவர் பூங்காவில் ‘3டி அனிமேஷன்’ திரையரங்கம் திறப்பு
நாட்டிலேயே முதல் முறையாக விலங்குகளுடன் உறவாடுவது போன்ற ‘3டி அனிமேஷன்’ திரையரங்கம் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வன உயிரின வார நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பெ.துரைராசு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளருமான சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவ உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
‘3டி அனிமேஷன்’ திரையரங்கம்
முன்னதாக, பூங்கா வளாகத்தில் நாட்டிலேயே முதல் முறையாக ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள ‘3டி அனிமேஷன்’ திரையரங்கத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். மும்பை, கொல்கத்தாவில் சோதனை முயற்சி தான் பார்க்கப்பட்டது. ஆனால் இங்கு தான் இந்த திரையரங்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் புலி, குரங்கு, சிறுத்தை, அனகோண்டா, பாண்டா, கங்காரு, பென்குயின், டால்பின், டைனோசர், ஒட்டகசிவிங்கி போன்றவற்றுடன் அருகில் இருந்து உறவாடுவது போன்றும், அதை தொட்டு பார்ப்பது போன்றும் அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு விலங்கினமும் அதற்கேற்ற சூழலில் இருப்பது போலவும், அதன் மத்தியில் நாம் இருப்பது போலவும் இந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 நிமிடங்கள் இந்த காட்சி ஓடும். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.25-ம், அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக நிர்ணயிக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 கோடி மரங்கள்
அதனைத் தொடர்ந்து நடந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 5 கோடி மரங்கள் தமிழக அரசு சார்பில் நடப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன’ என்று கூறினார்.