மறுவாக்கு எண்ணிக்கையிலும் நான் தான் வெற்றிபெறுவேன்- இன்பதுரை எம்.எல்.ஏ. நம்பிக்கை

மறுவாக்கு எண்ணிக்கையிலும் நான்தான் வெற்றிபெறுவேன் என இன்பதுரை எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-08 11:00 GMT
சென்னை,

2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 4–ந்தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சர்ச்சைக்குரிய 19, 20, 21 ஆகிய 3 சுற்று வாக்குகள் மட்டும் மீண்டும் எண்ணப்பட்டன. மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகிற 23–ந்தேதி வரை வெளியிட உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இன்பதுரை தற்போது துன்ப துரையாகி விட்டார். அப்பாவு ஜெயித்து விட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவுகிறது. ஆனாலும் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று பேசி இருந்தார். 

இதற்கு பதில் அளித்து இன்பதுரை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

தபால் ஓட்டு ராதாபுரம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. 203 தபால் ஓட்டுகள் முறையாக அட்டெஸ்டே‌ஷன் செய்யப்படவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டாகும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் அட்டெஸ்டே‌ஷன் செய்துள்ளனர்.

பெருவாரியான தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரே அட்டெஸ்ட் செய்திருந்தார். சட்டப்படி இது செல்லாது என்பதுதான் எனது வாதம் ஆகும்.

இதில் இன்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவில்லை நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது எனது தரப்பு வாதமாக இதை எடுத்து வைத்தேன். இதில் தபால் வாக்குகளை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அட்டெஸ்டே‌ஷன் செய்ய முடியுமா? என்ற சட்ட வினா எழுகிறது. இதன் மீதான தீர்ப்பு வந்த பிறகுதான் இந்த வழக்கில் தெளிவு கிடைக்கும்.  ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராதாபுரத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது போல் சுற்றி வளைத்து பேசுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

என்னை கிண்டலடிக்கும் வகையில் இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டதாக ஸ்டாலின் பேசுகிறார். அய்யாத்துரை மு.க.ஸ்டாலின் தந்தை அவருக்கு முதலில் அய்யாத்துரை என்று பெயர் சூட்ட நினைத்து பிறகு ஸ்டாலின் என்று பெயர் வைத்ததாக சொல்கிறார்கள். ராதாபுரம் வழக்கில் நான் வெற்றிபெற்று பேரின்ப துரையாக வருவேன். ஆனால் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் விசாரணை வருகிறது.

இந்த வழக்கின் முடிவில் அவருக்கு பாதகமான நிலை உருவானால் அய்யாதுரையான அவர்தான் ‘அய்யோ’துரை ஆகப் போகிறார். அதுமட்டுமல்ல 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் அவர் நிற்க முடியாமல் போகும். 

இவ்வாறு இன்பதுரை கூறினார்.

மேலும் செய்திகள்