திருச்சி நகைக்கடை கொள்ளையன் கைது

திருச்சியில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் சிக்கினான். மற்றொருவன் தப்பியோடினான்.

Update: 2019-10-03 17:51 GMT
திருவாரூர்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 30 கிலோ நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அதில் ஒருவன் தப்பியோடினான். மற்றொருவனை போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை போலீசார் சோதனையிட்ட போது அதில் நகைகள் சில இருந்தன. அந்த நகைகளில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன. இதனால் அவர்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரை திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இது குறித்து திருச்சி போலீசாருக்கு திருவாரூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவன் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை போலீசார் முழுவதுமாக சோதனையிட்டனர். அதில் இருந்த நகைகள் அனைத்திலுமே லலிதா ஜூவல்லரியின் முத்திரைகள் இருந்தன. மொத்தம் 5 கிலோ எடை அளவில் நகைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என போலீசார் கூறினர். தப்பியோடிய நபர் திருவாரூர் ஒட்டன் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (28) என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிடிபட்ட மணிகண்டனிடம் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்த திருச்சியில் இருந்து போலீசார் நேற்று இரவு திருவாரூருக்கு புறப்பட்டு சென்றனர். தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்