‘காவிரி கூக்குரல்’ இயக்க பயணம்: ஈரோடு மாவட்டத்தில் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

‘காவிரி கூக்குரல்’ இயக்க பயணம் தொடங்கிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஈரோடு மாவட்டம் வழியாக மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றார்.

Update: 2019-09-12 23:00 GMT
ஈரோடு, 

‘காவிரி கூக்குரல்’ இயக்க பயணம் தொடங்கிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஈரோடு மாவட்டம் வழியாக மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார்.

இந்த இயக்கத்தில் தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியான கர்நாடக மாநிலம் குடகு மலை முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி கடந்த 3-ந்தேதி தலைக்காவிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் காவிரி கூக்குரல் இயக்க பயணம் புறப்பட்ட அவர் மைசூரு, பெங்களூரு வழியாக நேற்று முன்தினம் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான ஓசூர் அத்திப்பள்ளிக்கு வந்தார்.

உற்சாக வரவேற்பு

இதைத்தொடர்ந்து நேற்று ஜக்கி வாசுதேவ் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழியாக அந்தியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றார். அவருடன் முக்கிய பிரமுகர்களும் மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

ஜக்கி வாசுதேவை காண அந்தப்பகுதி மக்கள் சாலையோரங்களில் அணிவகுத்து நின்று இருந்தார்கள். ஆனால் அவர் அங்கு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார்.

பின்னர் அந்தியூர், மேவானி வழியாக பவானிக்கு வந்த ஜக்கி வாசுதேவுக்கு, சேர்வராயன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் சார்பில் மாணவ-மாணவிகள் சாலையோரமாக நின்று வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜக்கி வாசுதேவ் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்