கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து
கனமழை எதிரொலியாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை கனரக மோட்டார் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 14 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.