‘ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் சைபர் தாக்குதலை முறியடிக்கும்’ தென் பிராந்திய உயர் அதிகாரி பெருமிதம்

‘ராணுவத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் சைபர் தாக்குதலை முறியடிக்கும்’ என தென் பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் ராணுவ பயிற்சி நிறைவு விழாவின்போது தெரிவித்தார்.

Update: 2019-09-07 22:44 GMT
சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) ராணுவத்தில் சேரும் அதிகாரிகளுக்கு 11 மாத போர் பயிற்சி, ஆயுத கையாடல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 153 ஆண் மற்றும் 30 பெண் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கும், தோழமை நாடான பூடான், செஷல்ஸ், மாலத்தீவு, பிஜி மற்றும் உகாண்டாவில் இருந்து 12 ஆண் மற்றும் 9 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த 204 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு இந்திய ராணுவ தென் பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் சத்தின்தர் குமார் சைனி தலைமை தாங்கினார். மேலும் மூத்த ராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள், லெப்டினன்ட் ஜெனரல் சத்தின்தர் குமார் சைனிக்கு அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரி ரவிகுமாருக்கு தங்க பதக்கத்தையும், அபிஷேக் குமாருக்கு வெள்ளி பதக்கத்தையும், விக்கிரமாதித்யா மங்காருக்கு வெண்கல பதக்கத்தையும் அவர் வழங்கினார்.

அதன்பின்னர் பயிற்சி நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் சேர உறுதிமொழி எடுத்து கொண்டு, 11 மாதங்கள் கடுமையான பயிற்சிகளை முடித்த உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் தூக்கியும், துள்ளி குதித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவர்களின் பெற்றோர், தங்களது மகன் மற்றும் மகள்களை ஆனந்த கண்ணீருடன் வாழ்த்தி ராணுவத்தில் பணி செய்ய வழியனுப்பினர். இந்த விழாவுக்கு பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் சத்தின்தர் குமார் சைனி நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய எல்லையில் பெரிய அளவில் ஊடுருவல்கள் எதுவும் இல்லை. சைபர் தாக்குதல் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதனை முறியடிக்கும் விதமாக நமது ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. புதிதாக பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்தும், அதிநவீன ஆயுதங்கள் குறித்தும், சைபர் தாக்குதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

அதன்படி பயிற்சியை நிறைவு செய்த சென்னையை சேர்ந்த ராணுவ அதிகாரி வைபவ் கிருஷ்ணா(வயது 25) கூறுகையில், ‘சிறு வயது சேவை மனப்பான்மை கொண்ட நான் ராணுவத்தில் பணியாற்றினால் 100 கோடி மக்களுக்கும் சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். தற்போது 100 கோடி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்றார்.

இதைபோல் பயிற்சியை நிறைவு செய்த கோவையை சேர்ந்த குஷ்பூ ஜெயின்(24) கூறுகையில், ‘பொருளாதார பட்டமேற்படிப்பை லண்டனில் பயின்றேன். அப்போதே தாய்நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். ராணுவத்தில் சேரவேண்டும் என முடிவெடுத்தேன். ராணுவ அதிகாரியாக பயிற்சி முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்