ரெயிலில் தொங்கியபடி உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

ரெயிலில் ஏறும்போது கால் தடுமாற்றமாகி ரெயில் படிகட்டு கம்பியில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிய பெண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாய்ந்து சென்று லாவகமாக தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

Update: 2019-09-03 20:00 GMT
சென்னை,

சென்னை மடிப்பாக்கம் மூவரசன் பேட்டையை சேர்ந்தவர் சுமதி(வயது 43). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன். இவர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

சுமதி கடந்த 30-ந்தேதி தனது உறவினர்கள் இருவருடன் பெங்களூரு புறப்பட்டார். இதற்காக பரங்கிமலையில் இருந்து மின்சார ரெயில் மூலம் சென்டிரல் ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து பெங்களூருக்கு ரெயிலில் செல்ல சுமதி திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அன்றைய தினம் அவர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தனது உறவினர்களுடன் மின்சார ரெயிலில் ஏற முற்பட்டார்.

அப்போது சுமதி உறவினர்கள் இருவரும் வேகமாக ரெயிலில் ஏறிவிட்டனர். ஆனால் சுமதி ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுமதி ரெயிலில் ஏற முடியாமல் அவரது கால் தடுமாறியது.

இருந்தாலும் தனது கையால் ரெயில் படிகட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு ரெயிலுக்குள்ளும் ஏற முடியாமல், கீழே இறங்கவும் முடியாமல் தொங்கியபடி சென்றார். உயிருக்கு போராடிய நிலையில் அவர் அபயகுரல் எழுப்பினார்.

ரெயில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று ரெயில் படிகட்டு கம்பியை பிடித்து தொங்கியபடி சென்ற சுமதியை லாவகமாக தாங்கி பிடித்து பத்திரமாக ரெயிலுக்குள் ஏற்றிவிட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் துணிச்சலாக செயல்பட்டு சுமதியை காப்பாற்றிய சம்பவம் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமதியும் தன்னை காப்பாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட ருக்கு நன்றி தெரிவித்தார்.

அந்த சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் அலெக்ஸ்சாண்டர். இவர் மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரெயில் ஏற காத்திருந்த போது சுமதியை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டரின் வீரதீர செயலைப் பாராட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கடிதம் ஒன்றை சுமதி அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தை பார்த்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்சாண்டரை தனது அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமதி, இவரது கணவர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்