பயன்பாடற்ற கிணறுகள் புனரமைப்பு: சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆய்வு பணி தீவிரம் 69 ஆயிரம் கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

சென்னையில், பயன் பாடற்ற கிணறுகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆய்வுப்பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2019-08-31 20:11 GMT
சென்னை, 

சென்னையில், பயன் பாடற்ற கிணறுகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆய்வுப்பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 69 ஆயிரம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு-தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநகராட்சி இணை கமிஷனர் ஆர்.லலிதா, துணை கமிஷனர்கள் எம்.கோவிந்த ராவ், பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன் மற்றும் வட்டார துணை கமிஷனர்கள், குடிநீர் வாரிய அதிகாரிகள் மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், உறை கிணறுகள் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ஜி.பிரகாஷ் பேசியதாவது:-

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

சென்னையில் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திடவும், பயன்பாடற்று உள்ள சமுதாய கிணறுகளை கண்டறிந்து மழைநீர் இணைப்புகள் ஏற்படுத்தவும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இக்குழுக்களால் 2 லட்சத்து 72 ஆயிரத்து 61 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 284 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்லநிலையில் உள்ளன. சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள 38 ஆயிரத்து 507 கட்டிட உரிமையாளர்களுக்கு அப்பணிகளை ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

மேலும் 69 ஆயிரத்து 490 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக் கப்பட வேண்டும். இக்கட்டிட உரிமையாளர்களுக்கு உடனடியாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, இம்மாதம் (செப்டம்பர்) இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 238 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகேயுள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிணறுகளை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உறை கிணறுகள்

இதேபோன்று மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இதுவரை 339 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்