கடலோர காவல் படைக்கு 65 புதிய கப்பல்கள் கட்டும் பணி தீவிரம் சென்னையில் நடந்த கப்பல் ஒப்படைப்பு விழாவில் அதிகாரி தகவல்

‘கடலோர காவல் படைக்கு நாடு முழுவதும் 65 புதிய கப்பல்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று சென்னையில் நடந்த கப்பல் ஒப்படைப்பு விழாவில் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-08-31 22:00 GMT
சென்னை, 

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு கடலோர காவல் படைக்கு 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து தர ஒப்பந்தம் போட்டது. அதன்படி 4 ரோந்து கப்பல்கள் வடிவமைத்து அளிக்கப்பட்டு உள்ளது.

5-வது ரோந்து கப்பலை பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கும் விழா காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பாதுகாப்பு நிதித்துறை செயலாளர் கார்கி கவுல் தலைமை தாங்கி பேசியதாவது:-

65 புதிய கப்பல்கள்

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட 5-வது கப்பலாகும். இது சுதேச மயமாக்கல் மற்றும் மேக் இன் இந்தியா மூலம் தன்னம்பிக்கை நோக்கிய பயணத்தின் மற்றொரு மைல் கல்லாகும். இந்திய கடலோர காவல்படை உலகின் 4-வது பெரிய காவல் படையாகும். இதனுடைய திறன் வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் பரந்த கடலோர பகுதியான 7 ஆயிரத்து 516 கிலோமீட்டர் அதாவது 20 லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான இடங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கடலில் சவால்களை எதிர்கொள்ள இந்திய கடலோர காவல்படைக்கு முழுமையாக ஆயுதம் வழங்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. கடலோர காவல்படையில் 141 கப்பல்கள் மற்றும் படகுகள் உள்ளன. கூடுதலாக, நாடு முழுவதும் பல்வேறு கப்பல் கட்டும் இடங்களில் 65 புதிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூடுதல் இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியல், கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி., எஸ்.பரமேஷ் மற்றும் கப்பல் கட்டும் நிறுவன அதிகாரிகள் வைஸ் அட்மிரல் பி.கண்ணன், ஜே.டி.பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நவீன கருவி-ஹெலிகாப்டர்

கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புதிய ரோந்து கப்பல் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-

கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் நீளம் 98 மீட்டர், அகலம் 14.8 மீட்டர் ஆகும். இதனுடைய எடை 2,100 டன்னாகும். அதிநவீன கருவிகளுடன், அதிக வேகத்தில் இயக்கப்படும் கப்பலாகும். கப்பலின் மேல்பரப்பில் நவீன ரக துப்பாக்கிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதுடன், ஹெலிகாப்டர் ஒன்றும் நிறுத்தப்பட்டு உள்ளது. கடலில் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

இந்த கப்பல் கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும். விரிவான சோதனைகளை முடித்த பின்னர் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்ட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்