நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை: சென்னையில் 2,600 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை: சென்னையில் 2,600 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
சென்னை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகளை 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று 6 இடங்களில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம் சார்பில் பொது இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பூஜிப்பது வழக்கம்.
இதற்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளிடம் இருந்து தனித்தனியாக அனுமதி பெற வேண்டிய நடைமுறை கடந்த ஆண்டு வரை அமலில் இருந்தது.
சென்னையில் 2,600 சிலைகள்
விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு அனுமதியை எளிதாக்கும் வகையில் இந்த ஆண்டு சென்னை போலீசார் ‘ஒற்றை சாளர’ நடைமுறையை அறிமுகப்படுத்தினர். அதன்படி விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் விநாயகர் சிலைகள் நிறுவும் அமைப்பினர் ஒவ்வொரு அலுவலகத்துக்கும் நேரடியாக சென்று அலையாமல் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து போலீசார் சார்பில் அனுமதி பெறப்பட்டது.
இதில் சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படியும் சென்னை முழுவதும் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநாயகர் சிலைகளுக்கும் ‘ஷிப்டு’ முறையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
கமிஷனர் ஆலோசனை
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 4 கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்; 6 இடங்களில் கரைக்கப்படுகிறது
பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று 6 இடங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விநாயகர் சிலைகள் வழிபாடுகள் முடிந்த பின்னர் வருகிற 5–ந் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 7–ந் தேதி (சனிக்கிழமை), 8–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 தினங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
விநாயகர் சிலைகள் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைக்கழக நகர் கடற்கரை ஆகிய 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதிகளில் சென்னை போலீசார் மூலம் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள், மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.