சென்னை கம்பன் விழா தொடக்கம்: 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது

சென்னை கம்பன் விழா தொடக்க நாளன்று 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Update: 2019-08-09 22:45 GMT
சென்னை,

சென்னை கம்பன் கழகம் சார்பில் 45-ம் ஆண்டு கம்பன் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. விழாவில் கலந்து கொண்டவர்களை கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வரவேற்றார்.

விழாவுக்கு ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். பேராசிரியர் கண.சிற்சபேசனுக்கு ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவிய கம்பர் விருது வழங்கப்பட்டதுடன், சிவாலயம் ஜெ.மோகன், பேராசிரியர்கள் சாமி.தியாகராஜன், அரிமளம் பத்மநாபன், கிருங்கை சொ.சேதுபதி, கவிஞர்கள் வா.மு.சேதுராமன், முகமது தாஹா, புதுகை வெற்றிவேலன், பேராசிரியைகள் உலகநாயகி பழநி, கஸ்தூரி ராஜா, சரஸ்வதி ராமநாதன், மணிமேகலை பிரசுரதத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர்கள் ஜெ.கமலநாதன், ஐஸ்வர்யன், சுந்தர.இலக்குமி நாராயணன், சமூக சேவகர் நா.பிரகாசம், டாக்டர் பிரியா ராமச்சந்திரன், மாணவர் வி.யோகேஷ்குமார், மாணவி ஜெ.மீனாட்சி என 19 பேருக்கு பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன.

புத்தக வெளியீடு

இலங்கை ஜெயராஜ் எழுதிய ஏவி.எம்.அறக்கட்டளைச் சொற்பொழிவு புத்தகமான ‘கம்பனில் பிரமாணங்கள்’ என்ற புத்தகத்தை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக்கொண்டார். மேலும் சொற்பொழிவு குறுந்தகடுகளையும் அவர் வெளியிட்டார். ‘கம்பனும் வால்மீகியும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார். கம்பன் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது, “கம்பன் தமிழகத்தில் புராணம் பாடுவதற்காக பிறந்தவன் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன தமிழர்களின் வாழ்வை திருக்குறளை பயன்படுத்தி தனித் தமிழில் மாபெரும் இலக்கியமாக படைத்தவன் கம்பன். ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்கள், மூவர்கள் எழுதிய தேவாரப் பாடல்கள், மாணிக்கவாசகர் உருவாக்கிய திருவாசகம் மற்றும் கம்பன், சேக்கிழார் போன்றோர் இயற்றிய இலக்கியங்கள் இல்லை என்றால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்வு அழிந்து போயிருக்கும்” என்றார்.

சட்டத்துறையின் மாண்பு

ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்.லட்சுமணன் பேசும்போது, “உலகப் பெரும் கவிஞர்கள் வரிசையில், கம்பன் மதிப்புகள் நிறைந்து நிற்கின்றான். கம்பன் என்று ஒரு மானிடன் பிறந்தான் என்றும், கம்பனை போல் வள்ளுவனைப் போல், இளங்கோவனை போல், யாரும் பிறந்ததில்லை என்று பாரதி பாடினான். ஒரு வடமொழி காப்பியத்தை மொழிப்பெயர்க்க தொடங்கிய கம்பன், தமிழ் பண்பாட்டிற்கு வேண்டிய புதியவற்றை சேர்த்தும், வேண்டாதவற்றை தவிர்த்தும், சிலவற்றை திருத்தியும் பாடியுள்ளான். வாலி வதை படலம், எங்கள் சட்ட துறையின் மாண்பை பறை சாற்றுகிறது” என்றார்.

டத்தோஸ்ரீ எம்.சரவணன் பேசும்போது, “ராமன் இந்த பூவுலகில் பிறப்பெடுத்ததே அறத்தையும், தர்மத்தையும் நிலை நிறுத்த தான். அதனை வெற்றியாக செய்து புகழ்கொண்டான் கம்பன். அவரது நூலின் நுட்பத்தையும் செறிவையும், மேன்மையையும், ஆழத்தையும் பேசுவது எனது பணி அல்ல. கம்பன் கூறியுள்ள ராமனை உதாரண நாயகனாக கொண்டு வாழும்படி வலியுறுத்துகிறேன்” என்றார்.

விழாவில், இலக்கிய செல்வர் குமரி அனந்தன், இலங்கை ஜெயராஜ், பட அதிபர் ஏவி.எம்.சரவணன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கம்பன் கழக செயலாளர் இலக்கியவீதி இனியவன், இணை செயலாளர் சாரதாநம்பி ஆரூரன், பொருளாளர் புதுவை மு.தருமராஜன், துணை செயலாளர்கள் மலர் மகன், எஸ்.விஜயகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்றும், நாளையும் கம்பன் விழா நடைபெறும்.

மேலும் செய்திகள்