ரூ.10,554 கோடியில் மாநகராட்சிகளில் நடந்து வரும் பொலிவுறு நகர திட்டப்பணிகள் விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நடந்து வரும் பொலிவுறு நகர திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 12 மாநகராட்சிகளில் செயல்படுத்தி வரும் பொலிவுறு நகர திட்டங்கள் (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்ட (அம்ரூட்) செயல்பாடுகள் குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சிகள் பொலிவுறு நகரத் திட்டத்திற்கு முதலாவது சுற்றில் 2015-2016-ம் ஆண்டில் சென்னை பெருநகரம், கோவை, 2-வது சுற்றில் 2016-2017-ம் ஆண்டில் மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர், 3-ம் சுற்றில் 2017-2018-ம் ஆண்டில் திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி, 4-ம் சுற்றில் 2017-2018-ம் ஆண்டில் ஈரோடு மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பொலிவுறு நகரங்களில், மொத்தம் ரூ.10 ஆயிரத்து 554 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 358 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் முயற்சி
இந்தியா முழுவதும் 500 நகரங்களை தேர்ந்தெடுத்து, இத்திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த இருந்த நேரத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த சீரிய முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி (28 நகரங்கள்) இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் பெருநகராட்சிகளில் தாம்பரம், ஆவடி, காஞ்சீபுரம் மற்றும் நகராட்சிகளில் கடலூர், திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், புதுக்கோட்டை, ஓசூர், ஆம்பூர், காரைக்குடி, நாகப்பட்டினம், நாகர்கோவில், பல்லாவரம், ராமேசுவரம் மற்றும் பேரூராட்சிகளில் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.11 ஆயிரத்து 441 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 445 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பொலிவுறு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசிற்கு இணையாக, தமிழக அரசும், ரூ.500 கோடி நிதியுதவி வழங்குகிறது.
இதில் ரூ.306 கோடியில் 411 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 30 திட்டங்கள் ரூ.8 ஆயிரத்து 625 கோடியில் நடைபெற்று வருகின்றன. 3 பெரிய திட்டங்கள் ரூ.2 ஆயிரத்து 246 கோடி மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி நிலுவையில் உள்ளன. ரூ.264.12 கோடி பாதாள சாக்கடை திட்டம் மறுஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளன. இந்திய அளவில் அம்ரூத் திட்ட செயலாக்கத்தில் தமிழகம் 49.20 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
மேற்கண்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பங்கேற்பு
கூட்டத்தில், முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, பேரூராட்சிகளின் இயக்குனர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.