தமிழ்நாட்டில் 2-வது பசுமை புரட்சியை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுகிறோம் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாட்டில் 2-வது பசுமை புரட்சியை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுகிறோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2019-08-07 22:15 GMT
சென்னை, 

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழா மற்றும் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களை அடைவதற்கும், பருவநிலை மீட்சிக்கான அறிவியலை பலப்படுத்துவதற்குமான கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சி தரமணி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மதுரா சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். இதில் செயல் இயக்குனர் என்.அனில் குமார், இந்து என்.ராம், உலக சுகாதார நிறுவன துணை பொது இயக்குனர் சவுமியா சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி ஆண்டறிக்கை மற்றும் கொள்கை விளக்க அறிக்கையையும், ஓ.பன்னீர்செல்வம் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30 ஆண்டுகால கண்டுபிடிப்புகளையும், பலனளிப்பு அறிக்கையையும் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பெரும் மகிழ்ச்சி

உலகம் போற்றும் விவசாய விஞ்ஞானியாக திகழும் எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 1942-ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரை பாதித்ததன் காரணமாக, இந்திய போலீஸ் பணித்துறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அந்த பணியில் சேராமல், இந்தியாவில் விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உணவு உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற தனது வாழ்நாளை வேளாண்மை முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர்.

இவர் மேலைநாடுகளில் வேளாண்மைத்துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றாலும், உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் தனது தாய்நாடு பின்தங்கி இருப்பதை அறிந்து, இந்தியாவிற்கு திரும்பினார். இவரது இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக, கோதுமை மற்றும் அரிசியில் உயர்விளைச்சல் பயிர்ரகங்கள் கண்டறியப்பட்டன.

தன்னிறைவு நிலை

இந்த பயிர் ரகங்கள் பயன்படுத்துவது பற்றிய விளக்கங்களை இவரே நேரடியாக விவசாய பெருமக்களிடம் சென்று எடுத்துரைத்துள்ளார். இந்த அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை விவசாயிகள் உற்பத்தி செய்ததன் காரணமாக, உணவுப்பொருள் உற்பத்தியில் பின்தங்கி இருந்த நமது நாடு, உணவு தன்னிறைவு பெற்று ஒரு பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்த நிலைமை முற்றிலும் மாறி, தன்னிறைவு நிலையை இந்தியா அடைந்ததன் காரணமாக தான் இவர் பசுமை புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். வேளாண்மைத்துறையில் இவர் நிகழ்த்திய சாதனையை கவுரவிக்கும் வகையில், இவருக்கு கொடுத்த பரிசுத்தொகையை கொண்டு இந்த ஆராய்ச்சி கட்டளையை தொடங்கினார்.

லாப நோக்கமற்ற இந்த தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களை இலக்காக கொண்டு, அவர்களின் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக அபிவிருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது.

இரண்டாம் பசுமை புரட்சி

இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வளப்படுத்தப்பட்டுள்ளன. சதுப்புநில காடுகள் மீட்கப்பட்டுள்ளன. 4,000 சத்துணவு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீழ்மட்ட அளவில் வேளாண்மை பணிகளை செய்ய நிறுவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற எண்ணற்ற வேளாண் சம்பந்தப்பட்ட பணிகளை 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

வேளாண்துறையில் ஜெயலலிதாவின் அரசு படைத்துள்ள சில சாதனைகளை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். இரண்டாம் பசுமை புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்திட முனைப்புடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியை இரு மடங்காக்கி விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்கிடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்