தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் “தண்ணீர் இல்லாமல் களையிழந்தது”

தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

Update: 2019-08-03 12:15 GMT
சென்னை,

ஆடி மாதம் 18-ஆம் தேதி நீர்நிலைகளில் பெருக்கெடுத்து வரும் நீரை வரவேற்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடி பட்டம் தேடி விதை என்ற பொன்மொழியின் படி விவசாயிகள் அடுத்த போகத்திற்கான விளைச்சலை தொடங்குவதற்கு முன் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அதுமட்டுமல்லாது சுமங்கலிகள் தாலிக்கயிறுகளை மாற்றிக் கொண்டு, தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். இதேபோல, கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் எனவும் பெண்கள் காப்பரிசியில் வெல்லமிட்டு படைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டியும் வழிபாடு செய்தனர்.

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் குளக்கரையில் ஆடி 18 பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடி ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர்.

பரமத்திவேலூரில், காவிரி ஆறு குட்டை போல் காட்சி அளித்ததால், அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், குறைந்த அளவிலான தண்ணீரில் புனித நீராடி, காவிரி அன்னைக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். 

 கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். அதேபோல் புதுமண தம்பதியினர் புத்தரிசி படைத்து, புது திருமாங்கல்யம் மாற்றி வழிபட்டனர்

நாகை மாவட்டம் பாலையூர் கிராம மக்கள் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை சோகத்துடன் கொண்டாடினர். குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து, வாய்க்காலில் வைத்து வழிபாடு நடத்திய பெண்கள், கடந்த 7 ஆண்டுகளாக காவிரி நீர் கடைமடை வராததால் ஒப்பாரி பாடல்களை பாடி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் போர்வெல் நீரில் புனித நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர். ஒரு சிலர், தண்ணீர் இல்லாத காவிரியில் புனித நீராட முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். அதேசமயம், துலாக்கட்டக்காவிரியில் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. 

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியில் ஆற்றில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். புதுமண தம்பதிகள் வருகை முற்றிலும் குறைந்து திருவையாறு படித்துறை களையிழந்து காட்சி அளிக்கிறது. 

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள், நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். கிணறு மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்