முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் தி.மு.க பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2019-08-02 22:45 GMT
நெல்லை,

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, இவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அப்போது உமா மகேசுவரி அணிந்து இருந்த 21 பவுன் நகையும் திருடப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அரசியல் முன்விரோதம் மற்றும் பணப்பிரச்சினையின் காரணமாக கொலை நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை (வயது 33) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

3 பேர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நெல்லை மாநகர போலீசார் திரட்டி இருந்த வழக்கு ஆவணங்கள் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அனில்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைரேகை உள்ளிட்ட ஒரு சில ஆவணங்களை போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு ஆவணங்களை பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கில் கார்த்திகேயனின் தாயாரும், தி.மு.க. பிரமுகருமான சீனியம்மாளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

அதேபோல் இந்த வழக்கில் சாட்சி அளித்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கொலையை கார்த்திகேயன் மட்டும் செய்து இருப்பாரா? என்ற சந்தேகம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் சிறையில் இருக்கும் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதற் கான மனுவை வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நெல்லை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்கிறாாகள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்