சிறை வைக்கப்பட்டதாக புகார் எதிரொலி: தொரட்டி பட கதாநாயகியிடம் போலீசார் விசாரணை “நான் மாயமாகவில்லை, வீட்டில் தான் இருக்கிறேன்” என விளக்கம்
தொரட்டி பட நாயகியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நான் மாயமாகவில்லை. வீட்டில் தான் இருக்கிறேன் என அவர் விளக்கம் அளித்தார்.
பொள்ளாச்சி,
தொரட்டி பட நாயகியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நான் மாயமாகவில்லை. வீட்டில் தான் இருக்கிறேன் என அவர் விளக்கம் அளித்தார்.
தொரட்டி பட நாயகி
சென்னை ஐகோர்ட்டில் பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன்மித்ரு என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் தொரட்டி என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த படத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்கிற சத்தியகலா(வயது 26) என்பவர் நடித்து இருந்தார். படப்பிடிப்புகள் முடிவடைந்து நாளை (வெள்ளிக்கிழமை) திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்த போது, கதாநாயகி சத்தியகலா மட்டும் வரவில்லை.
அவரை அவரது தந்தை சட்டவிரோதமாக சிறைவைத்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்டம் மகாலிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சத்தியகலாவை மீட்டுகோர்ட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியகலா தற்போது எங்கு உள்ளார்? என்று போலீசார் விசாரணை நடத்தி 5-ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நடிகை விளக்கம்
இதைதொடர்ந்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு நடிகை சத்தியகலாவை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் சத்தியகலா கூறுகையில், நான் பெற்றோருடன் வீட்டில் தான் வசித்து வருகிறேன். நான் மாயமாகவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
நடிகை சத்தியகலாவிடம் பெறப்பட்ட விளக்கத்தை வருகிற 5-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளருக்கும், நடிகைக்கும் இடையே சம்பள பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.