குரூப்-3, குரூப்-4 தேர்வுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களும் எழுதுவதால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3, குரூப்-4 தேர்வுகளுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த சக்கரைச்சாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக வருவாய்த்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. நான் பி.இ. முடித்திருந்தேன். இருந்தபோதும் இந்த தேர்வை எழுதி, வெற்றி பெற்றேன். ஆனால் நான் பி.இ. பட்டதாரி என்பதால், இந்த பணிக்கு கூடுதல் கல்வித்தகுதி உடையவர் என்று கூறி, என்னை நியமிக்க மறுத்துவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து, வருவாய்த்துறை உதவியாளர் பணியில் என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் குரூப்-4 உள்ளிட்ட அடிப்படை அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணிக்கு தேர்வான பின், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை.
வேலை வாங்குவதில் சிரமம்
கூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை ஐகோர்ட்டுகளிலும் உள்ளது. இரண்டாம் நிலை காவலர்களாக, பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுபோல கூடுதல் கல்வித்தகுதி உடையவர்கள் பெரும்பாலான வேலை நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதில்தான் ஆர்வமாக உள்ளனர். இதனால் அவர்களின் வேலைகளை முறையாக செய்வதில்லை.
அதிகபட்ச கல்வித்தகுதி
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் தகுதியுடைய நபர்கள் பொதுத்துறைகளில் தேர்வு செய்யப்பட வாய்ப்பாக அமையும். எனவே இதுகுறித்து 12 வாரங்களில் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.