தண்ணீர் பிரச்சினை பற்றிய கருத்து ‘தமிழக மக்கள் வருத்தப்பட்டதால் வலைத்தள பதிவை நீக்கிவிட்டேன்’ கிரண்பெடி பேட்டி

தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது, தமிழக மக்களை வருத்தமடைய செய்ததால், அந்த பதிவை நீக்கி விட்டேன் என கிரண்பெடி தெரிவித்தார்.

Update: 2019-07-07 22:21 GMT
ஆலந்தூர்,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளாக நான் தமிழர்களுக்காக சேவை செய்து கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தது, தமிழக மக்களுக்கு வருத்தம் ஏற்படும் வகையில் இருப்பதாக அறிந்ததும் அதை நீக்கிவிட்டேன்.

தமிழக மக்கள் தண்ணீர் பிரச்சினையில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை கிடையாது. கடந்த 3 ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிக்க கடுமையாக உழைத்து நீரை சேமிக்க கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டதால் தற்போது நீர் இருக்கிறது. மக்களுடன் இணைந்து நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு அணையில் இருந்தும் புதுச்சேரிக்கு தண்ணீர் வரவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும். இந்த திட்டக்குழுவில் எதிர்க்கட்சி தலைவர் உறுப்பினர் ஆவார். திட்டக் குழு கூட்டத்தில் சில கட்சி உறுப்பினர்களை அழைக்க முதல்-அமைச்சர் அரை நாள் முன் அனுப்பிய ஆவணத்தை நான் நிராகரிக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க ஆவணத்தை தலைமை செயலாளருக்கு உடனே அனுப்பிவிட்டேன். புதுச்சேரி மாநிலத்தில் நான் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகிறேன். நான் சட்டத்தை மீறி செயல்பட்டு இருப்பதாக கருதினால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்