நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவு - தினகரன்

நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2019-07-06 16:13 GMT
சென்னை,

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி கடந்த 2017-இல் தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாக்கள் குறித்து கடந்த 2 ஆண்டுகள் மௌனம் காத்து வந்த நிலையில், இந்த மசோதாக்களை நிராகரித்து விட்டதாக மத்திய அரசு இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில்  உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன.

இது குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்து விட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் மத்திய அரசோடு சேர்ந்து மக்கள் விரோத எடப்பாடி அரசு இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த மிகப்பெரிய நாடகம் அம்பலமாகி உள்ளது. பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் மாண்புக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுக்கும் இது மிகப்பெரிய தலைகுனிவாகும்.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வி விவகாரத்தில் மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை கூட்டாட்சி முறைக்கே சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்கள் அநியாயமாக உயிர் விட்டதற்குப் பிராயசித்தமாக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மீண்டும் மசோதா கொண்டு வர வேண்டும்.

நீட் தேர்வை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து அதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் ஒன்றுபட்டு நின்று நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்