மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.
சென்னை,
தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய 5 பேரின் பதவிகாலம் ஜூலை 24 ந்தேதியுடன் நிறைவடைகிறது.
திமுகவை சேர்ந்த கனிமொழியின் பதவி காலமும் முடிவடைய இருந்த நிலையில் அவர் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனதால் தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் மூலம் மாநிலங்களவையில் காலியாக போகும் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை 1-ம் தேதி தொடங்கியது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய ஜூலை 8-ந்தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 9-ம்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 11-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
அதன்படி தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. 3 இடங்களையும், தி.மு.க. 3 இடங்களையும் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 6 பேருக்கு மேலாக 7-வதாக தகுதியுள்ள யாரும் போட்டியிட்டால் வாக்குப்பதிவு நடக்கும் சூழ்நிலை ஏற்படும்.
இந்நிலையில் தி.மு.க. தரப்பில் இருந்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் வக்கீல் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த 3 வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலூரை சேர்ந்த முகமது ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டி என்று அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அதிமுக கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் பாமகவின் இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.