செந்தில்பாலாஜி பேச்சால் அவையில் கூச்சல்-குழப்பம் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் நேரடி மோதல்
செந்தில்பாலாஜி பேச்சால் அவையில் கூச்சல்-குழப்பம் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் நேரடி மோதல்
சென்னை,
தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜி பேச்சால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி-எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.
செந்தில்பாலாஜி
தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி தொகுதி) பேசினார். இவர் 2011-2016-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது இதே அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பிறகு, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் இவரும் ஒருவர். அதன்பிறகு, டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து, தி.மு.க.வில் இணைந்தார்.
சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தான், சட்டசபையில் நேற்று செந்தில் பாலாஜி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
அ.தி.மு.க. எதிர்ப்பு
செந்தில் பாலாஜி:- தி.மு.க.வில் எனக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதுடன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பதவியை நான் பணிந்து பெறவில்லை. குனிந்து.. குனிந்து.. கும்பிடு போட்டும் பெறவில்லை. குழந்தை போல் தவழ்ந்தும் பெறவில்லை.
(இந்த நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து, செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது, சட்டமன்றத்தில் தி.மு.க.வை பற்றி விமர்சனம் செய்து பேசியதையும், அது அவைக்குறிப்பில் இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி பேச முயன்றார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.)
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- உறுப்பினர் பேசியதில் மாற்றுக் கருத்துகள் ஏதேனும் இருந்தாலும் அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக்கம் சொல்வதற்கு உரிமை உண்டு. இதில் என்ன பிரச்சினை என்று தான் நான் கேட்கிறேன்.
ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- உங்கள் கட்சி தலைவரை பற்றி அவர் பேசியதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், நான் யாரிடமும் குனிந்து பதவி பெறவில்லை என்கிறார். அதற்குத்தான் எங்கள் அமைச்சர், அவர் (செந்தில் பாலாஜி) அ.தி.மு.க.வில் இருந்தபோது அவையில் என்ன பேசினார் என்பதைத் தான் கூற வருகிறார். 3 ஆண்டு கால இடைவெளியில் அவர் 2 கட்சிகள் மாறிய நிலை மக்களுக்கு தெரியும். அதைத் தான் அமைச்சர் சொல்ல வருகிறார்.
மு.க.ஸ்டாலின்:- அப்படி என்றால், இங்கு இருக்கக்கூடிய துணை முதல்-அமைச்சர் இடையிடையில் என்ன கருத்தில் இருந்திருக்கிறார், என்ன பேசியிருக்கின்றார். அதனை சொல்வதற்கு நீங்கள் அனுமதி தருக்கின்றீர்களா?. இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் அவர். அது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்றைக்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதைவிட வேறென்ன சாட்சி, சான்று வேண்டும்.
தர்ம யுத்தம்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- நான் தொடங்கியது தர்ம யுத்தம். முதல்-அமைச்சரும் ஆதரவு தந்தார். செந்தில்பாலாஜி அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்தபோது ஒரு கோடி முறை குனிந்த படங்கள் எங்களிடம் உள்ளது. எங்கள் இயக்கம் (அ.தி.மு.க.) தனியொரு குடும்பத்தின் பிடியில் சிக்கவில்லை. செந்தில் பாலாஜி சுயநலத்துக்காக அணி மாறினார்.
தவழ்ந்த காட்சிகள்
மு.க.ஸ்டாலின்:- இங்கு துணை முதல்-அமைச்சர் நல்ல விளக்கம் தந்திருக்கின்றார். எத்தனை முறை காலில் விழுந்த, புகைப்படங்களை எல்லாம் கொண்டுவந்து காட்டத் தயார் என்று. அவர் தவழ்ந்த காட்சிகளை எல்லாம் இதே அவையில் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதற்கு அவர் தயார் என்று ஒத்துக்கொள்கின்றீர்களா?. இதே துணை முதல்-அமைச்சர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவில் பிரச்சினை இருக்கின்றது. இதற்கு, விசாரணை நடத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர். அதற்காகத்தான் சமாதியில் சென்று தியானம் நடத்தியவர் அவர். இவற்றை எல்லாம் நான் எடுத்துப் பேச வேண்டுமா?. செந்தில் பாலாஜி, இப்போது தி.மு.க.வில் இருக்கிறார். எனவே, அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்ற கொள்கையின் அடிப்படையில் பேசுகின்றார். அதில் என்ன தவறு இருக்கிறது.
(இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்)
ஆள் கடத்தல் வழக்கு
சபாநாயகர் ப.தனபால்:- விவாதம் மாறி மாறி நடக்கிறது. ஆளுங்கட்சி ஒரு கருத்து சொன்னால், அதை மறுத்து சொல்ல எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு தருகிறேன்.
எடப்பாடி பழனிசாமி:- நான் தவறான கருத்தை சொல்லவில்லை. 2-4-2013 அன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டுவந்தார். அதாவது, போக்குவரத்து துறையில் ஊழல் நடந்திருப்பதாக சொன்னார். அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அதற்கு பதில் அளித்தார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். வெளியே பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி என்றே பேசியிருக்கிறார். இந்த செய்தி முரசொலி பத்திரிகையிலே வந்துள்ளது.
(இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)
பத்திரிகையில் வந்த செய்தி
எடப்பாடி பழனிசாமி:- நான் குறை, குற்றம் எதுவும் சொல்லவில்லை. நீங்கள் பேசி, அது பத்திரிகையில் வந்ததைத் தான் சொன்னேன்.
(இந்த நேரத்தில் பத்திரிகையில் வந்ததை ஆதாரமாக வைத்து பேசக்கூடாது என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)
சபாநாயகர் ப.தனபால்:- பத்திரிகையில் வந்ததை ஆதாரமாக வைத்து பேசக்கூடாது. ஆனால், நீங்கள் (தி.மு.க.) பேசி பத்திரிகையில் வந்ததைத் தான் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
துரைமுருகன்:- ஒருவர் கட்சி மற்றும் கொள்கை பிடிக்காதபோது வேறு கட்சிக்கு செல்வது தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இருக்கிறது. அப்போது அவர் பேசியதை இப்போது சொல்வது நாகரீகம் அல்ல. முதல்-அமைச்சர் பத்திரிகையில் வந்த செய்தியை சொன்னார். நாங்கள் அதுபோல் பேச முயன்றால் அனுமதி தருவது கிடையாது.
சபாநாயகர் ப.தனபால்:- பத்திரிகையை ஆதாரமாக வைத்து பேசக்கூடாது. ஆனால், அதில் வந்ததை சொல்வதால் அனுமதித்தேன்.
அவையில் விவாதிக்க அனுமதி?
எடப்பாடி பழனிசாமி:- குனிந்து.. குனிந்து.. என்று உங்கள் உறுப்பினர் பேசியதால் தான் இந்த பிரச்சினை. உங்கள் பத்திரிகையில் வந்த செய்தியைத் தான் நானும் சொன்னேன்.
மு.க.ஸ்டாலின்:- இதே துணை முதல்-அமைச்சர் என்னென்ன பேட்டி கொடுத்திருக்கின்றார். என்னென்ன அறிக்கை கொடுத்திருக்கின்றார் என்பதெல்லாம் பத்திரிகைகளில் வந்திருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த அவையில் சொல்வதற்கு நீங்கள் அனுமதி தருகின்றீர்களா?.
எடப்பாடி பழனிசாமி:- உங்கள் கட்சி (தி.மு.க.) அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையில் (முரசொலி) வந்த செய்தியைத்தான் கூறினேன்.
மு.க.ஸ்டாலின்:- அ.தி.மு.க.வின் அங்கீகாரம் பெற்றிருக்கக்கூடிய கட்சி பத்திரிகை நமது எம்.ஜி.ஆர்., அந்த பத்திரிகையில் வந்திருக்கக்கூடிய செய்தியை நான் உங்களிடத்தில் கொண்டுவந்து ஒப்படைக்கின்றேன். அதைப்பற்றி இந்த அவையில் விவாதிக்க நீங்கள் அனுமதி தருக்கின்றீர்களா?.
துரைமுருகன்:- எனக்கு இப்போது விஷயம் புரிகிறது. முதல்-அமைச்சருக்கு குனிந்து.. குனிந்து.. என்று உறுப்பினர் பேசியது தான் பிரச்சினையாக இருக்கிறது.
வழிகாட்டியாக இருக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் (துரைமுருகன்) மூத்தவர். 80 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மனதை புண்படுத்தியதால் பதில் கூற வேண்டிய நிலை வந்தது. செந்தில்பாலாஜி 5 கட்சிகளுக்கு மாறியவர். இப்போது இருக்கும் கட்சியிலாவது அவர் விசுவாசமாக இருக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்:- ஏதோ திட்டம் போட்டே வந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொன்னேன். நாட்டு மக்களுக்கும் அதே சந்தேகம் இருந்தது. அது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷனில் என்னை 4 முறை அழைத்தார்கள். 2 முறை பணிநிமித்தமாக செல்ல முடியவில்லை. 2 முறை அவர்கள் கூப்பிடவில்லை. அடுத்த முறை விசாரணைக்கு அழைத்தால் செல்வேன். எனக்கு தெரிந்த உண்மைகளை அப்போது சொல்வேன்.
மு.க.ஸ்டாலின்:- விசாரணை கமிஷன் போகின்ற நேரத்தில் உண்மைக்கு புறம்பாக இல்லாமல் நிச்சயமாக உண்மையைத்தான் சொல்லப்போகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். அவர் இதனைக் கேட்ட நேரத்தில் என்னென்ன குற்றச்சாட்டுகள் எடுத்துச் சொன்னாரோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் பெயரை சொல்லியும் அவர் மீது குற்றச்சாட்டுகளை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கின்றார். அவரே, உண்மைக்கு மாறாக பேசமாட்டேன் என்றார். உண்மையைத்தான் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
5 கட்சி மாறினேனா?
ஓ.பன்னீர்செல்வம்:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 34 நாட்கள் சிகிச்சையில் இருந்த நேரத்தில், அமெரிக்காவுக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்திருக்கலாம் என்று சொன்னேன்.
செந்தில் பாலாஜி:- நான் 5 கட்சி மாறி வந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் அதற்கு பொறுப்பெடுக்க வேண்டும். நிரூபிக்காவிட்டால் அவர்கள் பதவி விலக வேண்டும். நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன்.
எடப்பாடி பழனிசாமி:- உத்தமர் மாதிரி பேசினால் மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இரவு, பகலாக உழைத்தோம்
அமைச்சர் பி.தங்கமணி:- அன்று செந்தில் குமாராக இருந்து இன்று செந்தில் பாலாஜியாக பெயர் மாறி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:- அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிட்டபோது இரவு பகலாக நாங்கள் உழைத்தோம். அதனால் தான் அவர் வெற்றி பெற்றார். எங்களை பற்றி அவர் பேசினால், அவரைப் பற்றி நாங்கள் பேசுவோம்.
உரிமை
செந்தில்பாலாஜி:- ஒருவர் பெயரை மாற்றுவது என்பது அவரின் தனிப்பட்ட உரிமை.
(இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் பி.தங்கமணியின் பின்னால் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் மாற்றியதை சுட்டிக்காட்டியும் பேசினார். உடனே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் எழுந்து பேசினார்.)
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்:- நான் பாஸ்கர் என்ற பெயரை விஜயபாஸ்கர் என்று மாற்றிக்கொண்டேன். 1984-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன். வேறு கட்சிக்கு செல்வதற்காக பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய விவாதமா இது?.
புகழ்ந்து பேசக்கூடாது
மு.க.ஸ்டாலின்:- அவையில் இயக்கத்தை பற்றியும், இயக்க தலைவர்களை பற்றியும் புகழ்ந்து பாராட்டி பேசுகிறார்கள். பேசுவதில் எந்த தவறும் கிடையாது. நீங்களும் தொடர்ந்து பேசுகிறீர்கள். என்னை பொறுத்தவரை தி.மு.க. உறுப்பினர்களுக்கு பலமுறை சொல்லிவிட்டேன். இறுதியாகக்கூட அவர்களை எல்லாம் அழைத்து சொல்லப்போகிறேன். கேள்வி நேரத்திலும், மானியக் கோரிக்கை குறித்து பேசும் நேரத்திலும் நீங்கள் புகழ்ந்து பேசுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். நேரடியாக சொல்லவந்த கருத்தை பேசுங்கள் என்று சொல்லப்போகிறேன். செந்தில்பாலாஜி யாரையும் குறைசொல்லி பேசவில்லை. ஆனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுந்த சூழ்நிலையில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அவர் (செந்தில்பாலாஜி) மானியக் கோரிக்கையை விட்டு பேசக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். அதையே நீங்களும் பின்பற்ற வேண்டும். அதற்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும்.
குற்றமுள்ள நெஞ்சம்...
எடப்பாடி பழனிசாமி:- அவர் குனிந்து.. குனிந்து.. என்று பேசியதால் தான் நாங்களும் பேசுகிறோம்.
மு.க.ஸ்டாலின்:- அவர் யாரையும் பெயர் சொல்லி குறிப்பிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. குற்றமுள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.
எடப்பாடி பழனிசாமி:- எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சி என்று ஒன்று உள்ளது. அவர் அவை மரபை மீறி பேசுகிறார்.
(இந்த நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து, அ.தி.மு.க.வில் செந்தில்பாலாஜி இருந்தபோது தி.மு.க.வை பற்றி பேசி, அது அவைக்குறிப்பில் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
பாவத்தை கழுவ...
சபாநாயகர் ப.தனபால்:- அமைச்சர் அவைக்குறிப்பில் இடம் பெற்றதைத்தான் சுட்டிக்காட்டி பேசினார்.
துரைமுருகன்:- அப்போது அவர் (செந்தில்பாலாஜி) பேசியதற்கு வருத்தப்பட்டுத்தான், அந்த பாவத்தை கழுவ இங்கு (தி.மு.க.) வந்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:- இருக்கின்ற இடத்திலாவது அவர் விசுவாசமாக இருக்கட்டும். அடுத்த முறை அவர் இங்கு (அ.தி.மு.க.) வராமல் இருந்தால் போதும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.