ஆன்லைன் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடக்கம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது.
சென்னை
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. www.tnh-e-a-lth.org, www.tnm-e-d-i-c-a-ls-e-l-e-ct-i-on.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளான நேற்று 12 ஆயிரத்து 584 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தபாலிலும் அனுப்ப வேண்டும்
மாணவ-மாணவிகள் ஆன்லைனில் அனுப்பிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
இ-சேவை மையம்
மேலும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகம் கவுன்சிலிங் நடத்துகிறது. முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 4-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.