தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கடல் நீரை சுத்திகரிப்பு செய்வதுதான் ஒரே தீர்வு சுப்பிரமணிய சாமி
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கடல் நீரை சுத்திகரிப்பு செய்வதுதான் ஒரே தீர்வு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதும், அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததிலும் ஆச்சரியம் இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறவேண்டும் என்றால் தனியாக நிற்கவேண்டும். தோல்வி அடைந்துவிட்டதால் பா.ஜனதா பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்துதான் ஆகவேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடிதான் பதில் சொல்ல வேண்டும். எல்லா மாநிலங்களில் மும்மொழி இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது?.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் கடல் நீரை சுத்திகரிப்பு செய்து வழங்குவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். வேறு வழி இல்லை.
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டுதான் இருக்கிறார். இது நாடகம்போல் தெரிகிறது. ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசுவதாக இருந்தால் மும்மொழி கொள்கை பற்றி பேசவேண்டும். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று கூறவேண்டும். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு சாதகமாக எதுபற்றி பேசுகிறார். எதை வைத்து அப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.