முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது - ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தகவல்

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2019-06-06 08:50 GMT
சென்னை: 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி  மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. முகிலன் குறித்த தகவலை வெளியே தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தது.  இதனையடுத்து வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு சென்னை ஐகோர்ட்  ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்