தமிழகத்தில் மதவெறி பிடித்தவர்களுக்கு இடமில்லை ரம்ஜான் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் மதவெறி பிடித்தவர்களுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனர் என்று ரம்ஜான் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரவள்ளூரில் நடைபெற்ற ரம்ஜான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆயிரத்து 400 முஸ்லிம்களுக்கு பரிசு பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கணினியும் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், இந்த ஆண்டு ரம்ஜான் வாழ்த்து மட்டும் அல்ல, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தேடித்தந்த உங்களுக்கு நன்றி சொல்லவும் வந்து இருக்கிறேன். தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்து இருந்தாலும், நம்முடைய தொகுதியில் உள்ள உங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த விழா அமைந்திருப்பதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.
மதவெறி பிடித்தவர்களுக்கு இடமில்லை
இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ள தேர்தலில், தமிழகத்தை பொறுத்தவரையில் மதவெறி பிடித்தவர்களுக்கு, மதத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டும் என்ற உணர்வோடு அரசியல் நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, மதத்தை பிரித்து அதன் மூலமாக அரசியல் லாபம் தேடலாம் என்று கருதுபவர்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இடம் இல்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள். அதில் கொளத்தூர் தொகுதியும் அடங்கி இருப்பதை எண்ணி பார்க்கும் போது எனக்கும் பெருமையாக இருக்கிறது. நாளை ரம்ஜான் கொண்டாட இருக்கிறோம். அந்த நாளை மிகுந்த எழுச்சியோடு, பெருமையோடு, பூரிப்போடு கொண்டாடிட வேண்டும் என்று கூறி அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.