சிறுநீரகங்களுக்கு ரூ.3 கோடி தருவதாக 500 பேரிடம் மோசடி

ஈரோட்டில் சிறுநீரகங்களுக்கு 3 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-04 08:33 GMT
ஈரோடு

ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் தொடங்கப்பட்ட பேஸ்புக் கணக்கில் சிறுநீரகங்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 கோடி ரூபாய் தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்பணமாக 7ஆயிரத்து 500 ரூபாய் கட்டவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பி 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்பணம் செலுத்தியுள்ளனர். முன்பணம் செலுத்தி பலமாதங்கள் ஆகியும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் தங்கள் மருத்துவமனை பெயரில் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம கும்பல் மிசோரம் பகுதியில் இருந்து இயங்கி வந்தது தெரியவந்தது. அந்த கும்பல் சிறுநீரகங்களை பெறுவதாக கூறி நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை கடந்த 3 மாதங்களாக ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்