அரவக்குறிச்சி பிரசாரத்தின் போது சர்ச்சை பேச்சு : கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்
அரவக்குறிச்சி பிரசாரத்தின் போது சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் கமல்ஹாசனுக்கு கரூர் நடுவர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை,
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார். இந்த பேச்சும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கமல்ஹாசனை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
அதன்அடிப்படையில் இன்று கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜரானார். அப்போது அவருக்கு கரூர் நடுவர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.