“அந்த முருங்கைக்காய் எவ்வளவுப்பா?” விலை கேட்ட முதல்வர் பழனிசாமி!

மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முருங்கைக்காய் விலை கேட்டார்.

Update: 2019-05-07 10:07 GMT
மதுரை

மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட ஐராவதநல்லூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது எதிர்பாராத வகையில் வேனில் இருந்து இறங்கி தெருவிற்குள் நடந்த அவர், பலசரக்கு கடைக்காரர் கூடையில் வைத்திருந்த முருங்கைக்காயை எடுத்து, என்ன விலை என்று கேட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன் 20 ரூபாய் இருந்த முருங்கை தற்போது 10 ரூபாய்க்கு வந்துவிட்டது என்று அந்த கடைக்காரர் கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர், ‘நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான் என்று கூறிவிட்டு, அந்த கடைக்காரரிடம் ஓட்டு கேட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தவில்லை என பேசி வருகிறார். அம்மா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணி தொடங்கிய நிலையில் தி.மு.க.வினர் உயர்நீதிமன்றத்திலே சில காரணங்களை கூறி வழக்குத் தொடுத்தார்கள்.

அதனடிப்படையிலே தான் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றும் வகையில் 3 மாத காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இந்த  போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இருப்பினும் அனைத்து போராட்டங்களையும் சுமூகமான முறையிலே தீர்த்துவைத்து வெற்றிக் கண்ட அரசு அம்மாவின் அரசு.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகிறார், முதலமைச்சர் பதவி என்பது மக்களால் அளிக்கப்படுகின்ற பதவி.

அம்மா முதலமைச்சராக இருந்தபோது மரணம் அடைந்தார். அதன் பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நான் முதல்- அமைச்சராக இருந்து வருகிறேன்.

நடைபெறுகின்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இந்த ஆட்சி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார். அவர் முழுமையாக செயல்படாத நிலையில் கூட தனது தலைவர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை.  மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார். கருணாநிதியின் மறைவிற்கு பிறகுதான் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவரானார். பெற்ற தந்தையே இவரை நம்பாத பொழுது தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு இவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்.

ஒரு விவசாயி நாட்டை ஆளலாமா என்று ஸ்டாலின் கேட்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை இனிமேல் ஒரு விவசாயிதான் நாட்டை ஆள முடியும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க.என்றாலே அராஜகம் தான். அழகு நிலையத்திற்கு சென்று பெண்களின் மீது தாக்குதல் நடத்துவது, பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது, செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்வது போன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருவது தி.மு.க.வினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கின்ற அளவுக்கு அவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால் இது ஒன்றே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சியாகும் இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் செய்திகள்