புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிவாரண நிதி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.10 கோடி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-05-05 09:57 GMT
சென்னை,

தமிழகத்தை குறிவைத்த ‘பானி’ புயல் பாதை மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஒடிசாவை பந்தாடியது. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியும், இடைவிடாது பெய்த மழையும் கடலோர மாவட்டங்களை நிலை குலையச்செய்து விட்டன. ஆன்மீக நகரமான பூரியில் தொடங்கி 52 நகரங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும் பானி புயலால் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

‘பானி’ புயலின் ருத்ர தாண்டவத்தில் ஒடிசாவில் உள்ள மின் கட்டமைப்புகள் அனைத்தும் முற்றிலுமாய் அழிந்து போயின. நூற்றுக்கணக்கான என்ஜினீயர்களும், பணியாளர்களும் மின் வினியோக சீரமைப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

புவனேசுவரத்தில் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. தொலைதொடர்பு கட்டமைப்புகளும் உருக்குலைந்து போய் விட்டதால் அந்த சேவையும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

30 லட்சம் வீடுகளில் மின் வினியோகம் இல்லை. அவை இருளில் மூழ்கி உள்ளன. பெரும்பாலும் கடலோர நகரங்கள் தான் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. இருப்பினும் மின் வினியோகத்தை மீண்டும் தொடங்க தேவையான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவராண நிதியாக வழங்கப்படும். பானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஒடிசா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்