காரில் வந்தவர்களிடம் போலீஸ் போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளை?

காரில் வந்தவர்களிடம் போலீஸ் போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளை?

Update: 2019-05-02 22:00 GMT
திருப்பூர், மே.3-

காரில் வந்தவர்களிடம் போலீஸ் போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தில் எல்லைப்பிரச்சினையால் போலீசாரின் விசாரணை முடங்கியுள்ளது.

போலீஸ் போல் நடித்து...

கேரளாவை சேர்ந்தவர் அன்வர். தங்க நகை வியாபாரி. இவர் கடந்த மாதம் தனது டிரைவர் முகமது நிஷார் என்பவரிடம் ஒரு கிலோ தங்கத்தை கொடுத்து சென்னையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க அனுப்பி வைத்துள்ளார். முகமது நிஷார் உள்பட 3 பேர் காரில் சென்னை சென்று அந்த நபரிடம் தங்கத்தை ஒப்படைத்து விட்டு ரூ.3 கோடியை பெற்று கேரளாவுக்கு திரும்பியுள்ளனர்.

திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம்-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பகலாயூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 4-ந்தேதி அதிகாலைநேரம் கார் வந்தபோது 5 பேர் காரை மறித்துள்ளனர். அவர்கள் போலீஸ் என்று கூறி வாகனத்தை சோதனை நடத்தியுள்ளனர். காரில் இருந்தவர்களுக்கு கைவிலங்கு போட்டு பின்னர் சிறிது தூரம் அழைத்துச்சென்று பணத்தை பறித்துக்கொண்டு அவர்களை விட்டு சென்று விட்டனர். மர்ம கும்பல் போலீஸ் போல் நடித்து பணத்தை கொள்ளையடித்து தப்பியதாக கூறப்படுகிறது.

எல்லைப்பிரச்சினை

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அன்வர் மறுநாள் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பகலாயூர் பகுதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அன்வர் உள்ளிட்டவர்களை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பெருந்துறை போலீசார் சம்பவ நடந்த இடம் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி இல்லை, ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு கூறியதாக தெரிகிறது. எல்லைப்பிரச்சினை காரணமாக திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கொண்டு விசாரணை நடைபெறாமல் முடங்கிப்போயுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

ரூ.3 கோடி கொள்ளை?

இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசாரிடம் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக அன்வர் உள்ளிட்ட 4 பேர் வந்து புகார் தெரிவித்தனர். புகாரின் போது ரூ.30 லட்சம் பறிக்கப்பட்டதாக கூறினார்கள். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த சமயத்தில் அவ்வளவு தொகையை எந்தவித தயக்கமும் இல்லாமல் காரில் கொண்டு வந்தார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. மேலும் தங்கத்தை கொடுத்து பணம் பெற்று வருவதில் இவர்கள் முறையாக ஆவணங்கள் எதுவும் வைத்திருக்கவும் இல்லை. சம்பவ நடந்த இடம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் ஈரோடுக்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகு அவர்கள் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை என்றனர்.

இந்த கொள்ளை நடந்ததா? போலீஸ் போல் நடித்த கும்பல் ரூ.3 கோடியை கொள்ளையடித்ததா? அல்லது ரூ.30 லட்சத்தை பறித்ததா? என்றும், இந்த பணம் முறைகேடான பணமா? என்பதிலும் மர்மம் நீடிக்கிறது. இதுதொடர்பாக உளவுத்துறை போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்