பணத்தை கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ‘தேர்தலில் அ.தி.மு.க. பாச்சா பலிக்காது’ மு.க.ஸ்டாலின் பேட்டி

பணத்தை கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. பாச்சா பலிக்காது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-04-17 20:30 GMT
சென்னை,

பணத்தை கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. பாச்சா பலிக்காது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கோபாலபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்களுக்கு பணம்

மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத்துறையை, சி.பி.ஐ.யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி மிரட்டி உருட்டி செய்து கொண்டிருக்கின்றார்களோ அதே அடிப்படையில் தான் இப்பொழுது தேர்தல் கமிஷனையும் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது ஆண்டிப்பட்டி தொகுதி, தேனி தொகுதி தேர்தல்களை நிறுத்தவேண்டும் என்ற ஒரு செய்தி வந்து இருக்கின்றது.

ஆனால், நியாயமாக தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை தான் நிறுத்த வேண்டும். ஏனென்றால் அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் சார்பில் ரூ.1,000, ரூ.2 ஆயிரம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அவையெல்லாம் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு, பரவலாக ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை.

பாச்சா பலிக்காது

அதேபோல், வேலுமணியின் முழுஅளவில் பினாமியாக இருக்கக்கூடிய சபேசன் என்கின்ற ஒரு ஒப்பந்ததாரர். எல்லாப் பணிகளும் இந்த ஆட்சியில் அவருக்குத்தான் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக உள்ளாட்சித்துறையை பொறுத்தவரையில் எல்லா பணிகளும் அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. சமீபத்தில் அவரது இல்லத்தில் சோதனை நடந்திருக்கின்றது. அதைப்பற்றி இதுவரை எந்த செய்தியும் வரவில்லை, இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் என்னை பொறுத்தவரையில், தேர்தலை பொறுத்தவரையில், நான் உணர்ந்து கொண்டிருப்பது, ஆளும் கட்சியை சார்ந்து இருக்கக்கூடியவர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக இந்த தேர்தலுக்கு செலவழித்தாலும், குறிப்பாக வாக்காளர்களுக்கு ரூ.1,000, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனவும், ஏன் அதையும் தாண்டி வழங்கினாலும் மக்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும், மத்தியில் நடந்துகொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும் அப்புறப்படுத்துவதற்கான உறுதியை எடுத்து இருக்கின்றார்கள். எவ்வளவு தான் பணத்தை கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும், இந்தத் தேர்தலில் அவர்களுடைய பாச்சா பலிக்காது என்பதுதான் என்னுடைய திடமான நம்பிக்கை.

இந்தத் தேர்தல் ஒரு புதுமையான தேர்தலாக அமையப் போகின்றது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத, வாக்காளர்களை இந்த தேர்தல் நிரூபிக்கப்போகின்றது என்பது தான் என்னுடைய திடமான நம்பிக்கை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

தூத்துக்குடியில் சோதனை

கேள்வி:- வேலூரில் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தூத்துக்குடியில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது அதைப்பற்றி தங்கள் கருத்து?.

பதில்:- அது மிரட்டலுக்காக, அச்சுறுத்தலுக்காக, அந்த வேட்பாளர் பயந்து விடுவார், வேட்பாளருக்காக பணியாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய தி.மு.க.வை சார்ந்த கூட்டணிக் கட்சி தொண்டர்கள் வேலை செய்யாமல் படுத்து விடுவார்கள், அதேபோல் பூத் ஏஜெண்டுகள் எல்லோரும் சோர்ந்து போய் விடுவார்கள், என்ற மிரட்டலுக்காக நடத்தப்பட்டது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.

கேள்வி:- தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஐகோர்ட்டுக்கு போவதாக இருக்கின்றீர்களா?.

பதில்:- ஜனாதிபதியே கையொப்பமிட்டிருக்கின்ற பொழுது நீதிமன்றத்தில் அதற்குரிய பரிகாரம் வராது என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை. இருந்தாலும் முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்டரீதியாக நாங்கள் சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசிவிட்டு அதன் பிறகு முடிவு செய்வோம்.

ஊரை ஏமாற்றும் நாடகம்

கேள்வி:- சந்திரபாபு நாயுடு வந்திருந்த பொழுது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். அதைப்பற்றி உங்கள் கருத்து?.

பதில்:- இது ஒன்றும் புதிதல்ல. அதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம், அதைத்தான் அவரும் சொல்லி இருக்கின்றார். அதையெல்லாம் மீறி இந்த தேர்தலில் மக்கள் சரியான ஒரு முடிவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி:- சேலத்தில் முதல்-அமைச்சர் பணம் கொடுத்து இருக்கின்றார், கேட்டால் பழம் வாங்கினேன், அந்த பழத்திற்கு பணம் கொடுத்தேன் என்பது மாதிரி ஒரு கருத்து சொல்கின்றாரே?.

பதில்:- அது ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற பதில். ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற நாடகம் அது. அது ரகசியமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாக அதை கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.

பணத்திற்கு அடிமை இல்லை

கேள்வி:- இவ்வளவு சிக்கல்கள் கருத்துகள் இருக்கிறது, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்கின்றீர்கள், தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. தரப்பில் முக்கியமாக சொல்ல விரும்புவது?.

பதில்:- நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தேர்தல் ஆணையம் கூட வரக்கூடிய காலகட்டத்தில், அதையும் ஒரு முறைப்படுத்த வேண்டிய அவசிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் என்னுடைய கருத்து. நான் தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், பணத்திற்கு அடிமையாகாத நிலையில்தான் மக்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்