வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் என்னென்ன?

ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேர்மையாக நடக்கிறதா என்பதை நேரடியாக இருந்து உறுதி செய்வது, வேட்பாளர்களின் முகவர்கள்தான். அவர்களின் பணிகள் மகத்தானவை.

Update: 2019-04-13 21:30 GMT
சென்னை, 

வாக்குப்பதிவின்போது வேட்பாளர்களின் சார்பில் பூத் ஏஜெண்டுகள் என்ற முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் பணி மிக முக்கியமானதாகும். ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர், அவரை மாற்றுவதற்கு ஒரு முகவர் என 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் வாக்குச்சாவடிக்குள் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார். கள்ள ஓட்டுகள் விழுவதை தடுப்பதில் இவர்களின் பணி முதன்மையானது. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது முகவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதோடு அவருக்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். என்றாலும், அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்தவரையே முகவர்களாக வேட்பாளர்கள் அமர்த்துவர்.

நியமன அட்டை

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு முகவர் செல்லவேண்டும். வேட்பாளர், முகவர் 2 பேரும் கையெழுத்திட்ட கடிதம் அவரிடம் இருக்க வேண்டும்.

அதை வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொடுத்து முகவராக பதிவு செய்து கொண்டு, நியமன அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். மாற்று முகவரும் நியமன அட்டையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும். முகவரை மாற்றும்போது மட்டும் அவர் வாக்குச்சாவடிக்குள் வரவேண்டும்.

டம்மி ஓட்டுகள்

அந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலை முகவர் கொண்டு வரவேண்டும். பென்சில், பேனா, வெள்ளைத்தாள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த இடத்தில் அமர வைக்கப்படுகிறாரோ, வாக்குப்பதிவு முடியும்வரை அங்குதான் அவர் அமர வேண்டும்.

வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ஏற்கனவே வாக்குகள் பதிவாகவில்லை என்பதை முகவர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக வாக்குச்சாவடியில் இருக்கும் அலுவலர்கள் சில டம்மி ஓட்டுகளை பதிவு செய்து, அதன் மொத்த எண்ணிக்கையை முகவர்களுக்கு காட்டுவார்கள்.

டம்மி ஓட்டுகள் சரியாக பதிவாகிறதா என்பதையும் முகவர்கள் உறுதி செய்யவேண்டும். இவை உறுதி செய்யப்பட்ட பிறகு டம்மி ஓட்டுகள் அழிக்கப்பட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு தொடங்கும்.

சரியான கணக்கு

வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயரும், ஓட்டுப்பதிவு செய்ய வருபவரும் ஒருவர்தானா என்பதையும் முகவர்கள் கவனிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்குச்சாவடிக்கு வரும் 1,400 வாக்காளர்களையும் முகவர்கள் கவனித்தாக வேண்டும். பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை, நேரம் போன்றவை குறிக்கப்பட வேண்டும். வாக்கு எந்திரத்தில் உள்ள கணக்கு, வாக்குச்சாவடி அதிகாரியின் கணக்கு, முகவரின் கணக்கு ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயருக்கு சம்பந்தமில்லாத நபர் யாரும் வாக்களிக்க வந்தால் அதுதொடர்பான ஆட்சேபனையை, வாக்குச்சாவடி அதிகாரியிடம் முகவர்கள் தெரிவிக்க வேண்டும்.

சீல் வைப்பு

ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள தகவல்கள் சரியான முறையில் குறிக்கப்பட்டு, அதன் பின்னர் சீல் வைக்கப்படுகிறதா என்பதை முகவர்கள் உறுதி செய்யவேண்டும். அதன் பின்னர் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

அந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அரசு சார்பான வாகனங்களில் ஏற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்