டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -ராகுல் காந்தி

டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2019-04-12 12:29 GMT
தேனி

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல். எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் குரல் ஒலிக்கும். மக்களின் விருப்பத்தை உள்வாங்கி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம்.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். மோடி வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறார். வெறுப்பாலும் கோபத்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியாது. வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். தமிழகமக்களை அவர் தொடர்ந்து அவமதிப்பதை பார்த்து கொண்டு இருக்க முடியாது. தமிழ்மொழியின் தொன்மை அவருக்கு தெரியாது. அதை படித்தாவது அவர் தமிழகத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.

தமிழக மக்கள் விரும்பாததை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது. 

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் நேரடியாக பார்த்தேன். உங்கள் வேதனையிலும் சோதனையிலும் நாங்கள் பங்கேற்போம். அவர்களை நேரில் சென்று தழுவிக்கொண்டேன். விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  சமர்ப்பிப்போம்.

ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும்.

கடனை திருப்பி கொடுக்காத எந்த விவசாயியும் சிறை செல்லும் நிலை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வராது. அனில் அம்பானியை நடமாட விட்டு விட்டு விவசாயியை சிறையில் அடைப்பது ஏன்?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்துறை சீரழிந்து  விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விரும்புகிறார்கள். ஆனால் இளைஞர்கள் தொழில் தொடங்க பல அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. எந்த  தகுதியும் இல்லாமல் அனில் அம்பானி ராணுவ ஒப்பந்தம் பெறுகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு இளைஞர்கள் தொழில் தொடங்க எந்த லஞ்சமும் கொடுக்க வேண்டியது இல்லை.

ஊராட்சி பணியிடங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை;  எங்களால் நியாய் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

நமது கூட்டணி மிகப்பெரிய காரியங்களை செய்து முடிக்க உள்ளது. நமது  யுத்தம் 2 கருதியல்களுக்கு இடையேயான யுத்தம் . மத்திய அரசின் பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வருவோம் என கூறினார்.

மேலும் செய்திகள்